தவறவிட்ட 2009 முள்ளிவாய்க்கால் புகைப்படம் !

0
555
Article Top Ad
படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

ஊடகவியலாளனான நான் முக்கியமான இடங்களுக்குப் போகும் போது  அந்த இடத்திற்கு முன்பாக நின்று புகைப்படங்களை எடுப்பதுண்டு.

அது போன்றே முக்கியமான மனிதர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துவைத்துக்கொள்வதுண்டு.

நான் இப்படிப் புகைப்படங்களை எடுக்கும் போது என்னுடைய சக ஊடகவியலாளர்கள் என்னை கிண்டல் செய்வதுண்டு.

என்னதான் ஊடகத்துறைக்குள் நுழைந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டாலும் இப்போதும் ஒவ்வொரு செய்திகளை எழுதும் போதும் என்னை புதியவனாக பார்ப்பதனால் சிறுவர்களுக்கே உரிய ஆர்வத்துடன்  நான் படங்களை எடுக்கத்தவறுவதில்லை.

அந்தப்படங்களை மீண்டும் பார்க்கும் போது அவை வெறுமனே படங்களாக அன்றி வரலாற்று சான்றுகளாக எனக்குத் தோன்றும் .

அந்த இடத்திற்கும் காலத்திற்கும் என்னைக் கொண்டுசென்றுவிடும் ஊடகமாக அந்தப்படங்கள் அமைவதுண்டு.

சக்தி, தீபம் டீவியில் பணியாற்றிய காலத்தில் செய்தி சேகரிப்பிற்கான வன்னிக்குச் சென்றபோது விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் எடுத்த புகைப்படம் ( துரதிஷ்டவசமாக அது கணனியில் இருந்து அழிந்துவிட்டது சோகக்கதை)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச்.எம் அஷ்ரப் ,மலையக மக்கள் முன்னணியின்  தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பார்க்கின்றபோது அந்த தருணங்கள் மனதில் நிழலாடும்.

2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வன்னிக்கு சென்ற போது எடுத்த பல புகைப்படங்கள் இப்போதும் அந்த தருணங்களை கண்முன்னே கொண்டுவரும்.

போர் மீண்டும் 2006ம் ஆண்டு கடைசியில் மூண்டபின்னர் வன்னிக்குப் போகும் வாய்ப்பு இரண்டு வருடங்கள் இல்லாமல் போனது .

இதன் பின்னர் 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி  கிளிநொச்சி  அரசபடைகள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததையடுத்து இரண்டுமாதங்கள் கழித்து இராணுவத்தினர் தெற்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்காக ஒரு ஊடக சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர் .

2009 பெப்ரவரி மாதம் 22ம் திகதி :இந்த தினம் எனக்கு நினைவில் இருக்கவில்லை. என்னோடு வந்த சிங்க ஊடகவியலாளர் ரந்திக ஹெட்டியாராச்சியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவருக்கும் தினம் நினைவில்லை .

ஆனால் அன்றுதான் ஸ்லம்டோர்க்  மில்லியனர் திரைப்படத்திற்கு ஒஸ்கார் விருது கிடைத்தது என்பதை திட்டவட்டமாக கூறமுடியும் என்று சொன்னார். அதன் மூலமாக 2009 பெப்ரவரி 22ம் திகதியே அந்த நாள் என உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அப்போது எமக்கு வவுனியாவிலுள்ள மெனிக் பார்ம் இடைத்தங்கல் முகாமிற்கே செல்லக்கிடைத்தது. அங்கு கண்ட காட்சிகளை மக்களுடன் பேசிய தருணங்களை இன்று நினைத்தாலும் வேதனைதான்.

இதற்குப் பின்னர் தென்பகுதியிலுள்ள ஊடகவியலாளர்களை  இராணுவம் வன்னிக்கு அழைத்துச் சென்ற தினம் 2009 ஆண்டு ஏப்ரல் 24ம்திகதி.

http://aroarun.blogspot.com/2009/04/blog-posyt_8411.html

கொழும்பிலிருந்து முதலில் அநுராதபுரத்திற்கு விமானத்தில் சென்று அங்கிருந்து கிளிநொச்சிக்கு ஹெலிக்கொப்டரில் சென்று பின்னர் அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதியூடாக புதுமாத்தளன் வரை சென்ற பயணம்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

கிளிநொச்சியில் இறங்கிய போது தீபம் டீவியின் கமராமென் ருவான் மல்தெனிய இராணுவக் கவச வாகனங்களுக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். அப்போது நானும் அவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தேன்.

அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை தலைமையகம் அமைந்திருந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

அங்கு ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டபின்னர் ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சண்டையில் பலியான விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகளின் படங்களையும் கைப்பற்றிய ஆயுதங்களையும் காண்பித்தனர்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

அங்கிருந்துபரந்தன் முல்லைத்தீவு வீதியாக அழைத்துச் சென்றபோது வளமிக்க தர்மபுரம்,, விசுவமடு புதுக்குடியிருப்பு பகுதிகள்  சின்னாபின்னமாகிக்கிடந்ததைக் காணமுடிந்தது. கவசவாகனத்தில் இருந்தவாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

அதன் பின்னர் இரணைப்பாலை ஊடாக புதுமாத்தளன் சென்றோம். அந்த இடத்தில் நின்றபோது இறுதியுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பகுதியென சிறிய நீர்ப்பரப்பிற்கு அப்பால் உள்ள பகுதியைக் காண்பித்தனர். நாம் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள் தான் இருந்தது என படத்தைப் பார்த்தபின்னர் முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன்  என்னிடம் கூறினார்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

நாம் நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்து பார்த்தபோது சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. சில இடங்களில் புகைவெளிக்கிளம்பிக்கொண்டிருந்தது. பலரும் அந்தக்காட்சிகளைப் பின்னணியாக வைத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

வழமையாக படங்களை முந்திக்கொண்டு எடுக்கும் எனக்கோ அன்று என்னுடைய உருவத்துடன் சண்டை இடம்பெறும் பகுதி தெரியும் படியான படங்களை எடுக்கத்தோன்றவில்லை. அப்படி படங்களை எடுக்காமல் விட்டது  நான் எடுத்த நல்ல முடிவு என்றே பார்க்கின்றேன்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

தமிழ் மக்களின் வாழ்வில் இதனை விட சோகத்தை அனுபவித்துவிட முடியுமா என அமைந்துவிட்ட இறுதிப்போர்நாட்களின் நினைவுகளால் நித்திரையிழந்த பல நாட்கள் உண்டு. இந்த வாரம் கூட எனது மனம் நிம்மதி தொலைத்து கவலையால் ஆட்கொள்ளப்பட்டது இன்றும் வேதனையில் மூழ்கிவிட்டேன்.

படப்பிடிப்பு அருண் ஆரோக்கிநாதன்.

என்னுடைய உருவத்துடன் சண்டை இடம்பெறும் பகுதி தெரியும் படியான படங்களை எடுத்திருந்தால் 2009ம் ஆண்டின் அந்தக்கணங்களுக்கு என்னை மீண்டும் அழைத்துச் சென்று தற்போதைய நிலையைவிட கோரமான நினைவுகளால் வாட்டி வதைத்திருக்கும். அந்தப்படங்களை எடுக்காமல் தவறவிட்டது நல்லதே.

ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயமாக என்மனதில் படுகின்றது. தமிழர்கள் இலங்கையில் இதனைவிடவும் மோசமான வேதனையை அண்மைய எதிர்காலத்தில்  ஏன் இன்னமும் பல தசாப்தத்துக்கு கூட்டாக அனுபவிக்கப்போவதில்லை. இதுவும் கடந்து போகும். அட்டூழியம் இழைத்தவர்கள் ஆர்ப்பரிக்கலாம். அதர்ம வழியில் நடந்தவர்கள் அதற்கானவிலையைக் கொடுப்பார்கள். . பொறுத்திருப்போம்.

ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதன்

(2020ம் ஆண்டு மே மாதத்தில் எழுதிய இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்கின்றேன்.)