பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்ல என்று இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரினூடாகப் புலப்படுகின்றது என இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டுப் போரின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நடவடிக்கைகளின்போது உயிர்நீத்த அனைவருக்காகவும் காணாமல் போனவர்களுக்காகவும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டோருக்கும் தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்காகவும் தாம் பிரார்த்திப்பதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுதந்திரத்தின் உயர்ந்த குறிக்கோள்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதையும், சமத்துவமும் நீதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் போரின் கடைசி நாட்கள் உணர்த்துகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், பிரச்சினை எந்தக் கோணத்தில் வந்தாலும் அதற்கு வன்முறை தீர்வாக அமையாது என்பதையும் உள்நாட்டுப் போர் புலப்படுத்துகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் புரையோடிப்போயுள்ள குரோதம், பகைமை நீங்க உறுதியாக செயற்பட வேண்டும் என்றும், பாரபட்சம் நீங்கி அர்ப்பணிப்போடும் திடசங்கற்பத்துடனும் நீதியை நிலைநாட்டச் செயற்பட வேண்டும் என்றும் இலங்கை திருச்சபை பேராயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.