கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் அந்த நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு ஜப்பானில் பரவாமல் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய தெற்காசிய நாடுகளுக்கான கடுமையான எல்லைக் கட்டுப்பாடு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (21) முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதனிடையே ஜப்பான் அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ள கட்டுப்பாடுகளின்படி, அவசரகால சூழ்நிலைகளுக்கு அமைய நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், பங்களாதேஷ் மற்றும் மாலை தீவுக்கு விஜயம் செய்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் ஜப்பான் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களும், ஜப்பானில் வசிப்பதற்கான அனுமதி பெற்ற வெளிநாட்டவர்களும் ஜப்பான் திரும்பியவுடன் 6 நாட்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தளிமைப்படுத்தல் காலப்பகுதியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.