புதிதாக அமைக்கப்படவுள்ள கொழும்புத் துறைநகர் ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்படலாம் என கொழும்பைத்தளமாகக்கொண்ட ஆங்கிலப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகர் ( போட் சிட்டி) ஆணைக்குழு சட்டத்திற்கு அமைவாக ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கமுடியும்.
இந்த நிலையில் ஆணைக்குழுவின் தலைமைப்பதவிக்கு காமினி மாரப்பன நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துறைமுக நகர் ஆணைக்குழு வரைவு சட்டமூலம் அரசாங்கத்தினால் முன்வைக்க்பபட்டதையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுக்களைச் தாக்கல் செய்தபோது அமைச்சர் ஜி.எல் .பீரிஸால் துறைமுக நகருக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு சார்பாக வாதாடியவர் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான திலக் மாரப்பனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.