X-Press Pearl கப்பல் எண்ணெய்க்கசிவு தொடர்பாக முரண்பட்ட தகவல்கள்

0
317
Article Top Ad

X-Press Pearlகப்பல் அனர்த்தம் ஏற்பட்ட கடற்பரப்பில் பெரும் எண்ணைய்க்கசிவு படர்ந்து காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்மதிபடங்களின் துணையுடன் வெளியிட்ட செய்தியை இலங்கை தரப்பினர் தொடர்ந்தும் மறுத்துவருகின்றனர்.

கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுவதாக SKY இணையத்தளம்  செய்திவெளியிட்டதை இலங்கையில் முதன் முறையாக Globe Tamil இணையத்தளம் நேற்றையதினம் சுட்டிக்காட்டியிருந்தது.

கப்பல் மூழ்கியுள்ள பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தினூடாக பெறப்பட்ட நிழற்படங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

தீப்பற்றிய கப்பல் மூழ்கியுள்ள கடல் பிராந்தியத்தில் பாரியளவில் எண்ணெய்ப் படலம் காணப்படுகின்றனமை குறித்த செய்மதி படங்களினூடாக தெரியவந்துள்ளது.

இதனைத் தவிர, கப்பல் மற்றும் கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் செய்மதி தொழில்நுட்பத்தினூடாக பெறப்பட்ட நிழற்படங்களையும் சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய கடல் சார் பாதிப்பு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துவெளியிட்டிருந்த நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா,எண்ணெய்ப் படலம் இல்லை என கண்காணிப்புகளூடாக உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மூழ்கும் கப்பலை அண்மித்து  கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய கரையோர காவற்படைக் கப்பலும் இலங்கை கடற்படையினரும் எண்ணெய்க்கசிவு இடம்பெறவில்லை என்பதை தமக்கு அறிவித்துள்ளதாக டுவிட்டர் தளத்தில் நாலக கொடஹேவா மேலும் தெரிவித்திருந்தார்.

படங்கள் தவறாக வழிநடத்தக்கூடியவை. இருப்பினும் இதனை உறுதிசெய்வதற்கு நாம் இன்று நிபுணர்களை அனுப்பிவைக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தீப்பற்றிய கப்பலிலிருந்து கரையொதுங்கிய ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை வத்தளை பகுதியில் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடலில் மூழ்கிவரும் X-Press Pearl கப்பலில் பாரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என சோதனையிட கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் குறித்த பகுதியில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் மூழ்கி வரும் கடற்பகுதிக்குச் சென்ற குறித்த அதிகாரசபையின் குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு அங்கு நீர் மாதிரிகளையும் சேகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளைஇ குறித்த கப்பல் மூழ்கி வரும் இடத்தில் தென்மேற்கு திசையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமான நாரா (NARA) அறிவித்துள்ளதுடன், அது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இக்கப்பலினால் ஏற்படக் கூடிய சூழல் பாதிப்பு அபாயம், சுமார் 20 ஆண்டுகளுக்கு நீடிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த கப்பலால் இலங்கைக்கு ஏற்படும் சூழல் பாதிப்புக்கு காரணமான, அனைவர் மீதும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களான சிங்கப்பூரைத்தளமாகக் கொண்ட எக்பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியைக் சூழவுள்ள கடற்பரப்பில் எண்ணெய்க்கசிவு இடம்பெற்றதற்கான எவ்விதமான தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை என இன்று மாலை 6 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.