அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி: இந்தியாவிலிருந்து சில வாரங்களில் இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியம்

0
213
Article Top Ad

பலமாதங்களாக விநியோகம் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தநிலையில் ,இந்திய அரசாங்கமானது அஸ்ட்ரா செனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கிணங்க எதிர்வரும் ஜூலை இறுதிப்பகுதியில் அல்லது ஓகஸ்ட் முதற்பகுதியில் மேற்படி தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்திய அரசாங்கமானது இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கும் அஸ்ட்ரா செனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுத்துள்ளது.

அந்த நிலையில் இத்தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இந்திய சீரம் நிறுவனம் தீ அனர்த்தத்திற்குள்ளாகியதால் தடுப்பூசி உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் மீண்டும் அந்த நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அத்துடன் இந்தியா மீண்டும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கி இலங்கை மக்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியாக அவை பெற்றுக் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டதால் தொடர்ந்தும் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையிலேயே இந்தியாவிடமிருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவிடமிருந்து அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாது போகும் பட்சத்தில் ஏனைய நாடுகளிலிருந்து அதனைப் பெற்று மக்களுக்கு வழங்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது