டென்னிஸ் வரலாற்றில் எந்தவொரு ஆண் வீரரும் சாதிக்காத சாதனையை நோக்கிய நொவாக் ஜோகோவிச்சின் பயணம் டோக்கியோவில் முடிவிற்கு வந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் செர்பியாவை சேர்ந்த நொவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஜோகோவிச்-ஐ எதிர்த்து விளையாடிய ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ் 1-6 6-3 6-1 செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
டென்னிஸ் போட்டிகளில் வருடமொன்றில் நடைபெறும் நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சம்பியன் பட்டம் வென்று அதேவருடத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றால் அதனை கோல்டன் ஸ்லாம் என்பர்.
1988ம் ஆண்டு ஜேர்மனிய வீராங்கனை ஸ்டெபி கிராப் டென்னிஸ் அரங்கில் நிகழ்த்திய அற்புதமான கோல்டன் ஸ்லாம் அரும்பெரும் சாதனையைப் படைக்கும் சேர்பிய வீரர் நொவாக் ஜோகோவிச்சின் கனவும் இன்று வெள்ளிக்கிழமை டோக்கியோ ஒலிம்பிக்கில் பறிபோயுள்ளது.
ஜோகோவிச் இதுவரை ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றதில்லை. கடந்த 2008ம் ஆண்டு ஒலிம்பிக்சில் வெண்கலப்பதக்கம் வென்றதே அவரது சிறந்த பங்களிப்பாகும்.