ஆறிவுடையர்கள் எனப் பெருமைகொள்ளும் மனிதர்கள் செய்த தவறுகளுக்காக ஐந்தறிவுடையவை எனக் கூறும் விலங்கினங்கள் தண்டனை அனுபவிக்கும் துர்ப்பாக்கியநிலை இந்த உலகில் அதிகரித்துவருகின்றது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் இடம்பெற்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் கடல்வாழ் உயிரிழனங்கள் இறந்து கரையொதுங்கும் செய்திகள் பதிவாகி வருகின்றமை பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது.
தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய MV X-Press Pearl கப்பல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் இதுவரை 417 கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் திணைக்களம் இதனை தெரிவித்திருந்தது.
அதற்கமைய 417 கடலாமைகள் 48 டொல்பின்கள் 8 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கப்பலின் தீ காரணமாக வெளிவந்த நச்சு இரசாயனங்கள் மற்றும் எரிபொருள் கடல் நீரில் கலந்துள்ளதாக அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் மன்றிற்கு தெரிவித்தார்.
கடந்த மே 20ஆம் திகதி திடீரென தீ பரவலுக்குள்ளான MV X-Press Pearl கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் வைத்து பாரிய தீ அனர்த்தத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து அது கடலில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதேவேளை கடல் விலங்குகள் இறப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் ஏபதனால் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜசிங்கவும் தெரிவித்திருந்தார்.
மே 24 அன்று எரியுண்டு அனர்த்தத்துக்குள்ளான கப்பலில் ஆபத்துமிக்க இரசாயனப்பதார்த்தங்களைத் தாங்கிய 81 கொள்கலன்கள் இருந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் 25 கொள்கலன்களில் மிகமிக ஆபத்தான நைட்ரிக் அமிலம் இருந்துள்ளது. இதனைத்தவிர 1200 மெட்ரிக் தொன்கள் அளவான பிளாஸ்டிக் சிறுதுணிக்கைகளும் இருந்து அவற்றில் பெருமளவானவை கடலில் வீழ்ந்துள்ளன. இவை தொடர்ந்தும் கரையொதுங்கிவருகின்ற நிலையில் தொடர்ச்சியாக கடற்கரைகளைச் சுத்தமாக்கும் பணிகள் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப்பகுதிகளில் இடம்பெற்றுவருகின்றன.
கடலுடன் கலந்த இந்தப் பதார்தங்களின் தாக்கம் காரணமாக நாட்டின் கடல் சூழலை பல ஆண்டுகளாக பாதிக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ந்தும் இறந்து கரையொதுங்கிவரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறை பிரதேசத்திற்கு செய்திசேகரிக்க சென்றிருந்தேன். அப்போது கடலாமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்களில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துள்ள துஷான் கப்புறுசிங்கவைச் சந்தித்தோம்.
கடல்வாழ் உயிரினங்கள் என்பவை இறந்து கரையொதுங்குவது புதிய விடயமல்ல ஆனால் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இறந்து கரையொதுங்கிய எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது என்கிறார் அவர். ‘ ஒவ்வொரு வருடமும் கடல்கொந்தளிப்பு காணப்படும் காலப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுக்குவதுண்டு. குறிப்பாக பார்த்தால் ஆண்டுதோறும் சராசரியாக 40 ஆமைகள் இவ்வாறு இறந்து கரை ஒதுங்குவதுண்டு. கடுமையான அலைகளால் பாறையில் மோதுண்டு இறக்கும் ஆமைகள் .
மீனவர்களின் வலைகளில் சிக்கி இறக்கும் ஆமைகள் என பல்வேறு வகையானவையும் இதில் அடங்கும். ஆனால் இந்த வருடமோ இதுவரை 300ற்கு அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதற்கு நிச்சயமாக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாகும்’ என்கிறார் துஷான் கப்புறுசிங்க
எதிர்காலத்தில் மேலும் பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றார் கப்புறுசிங்க. இறந்து கரை ஒதுங்கியவை போக இன்னும் பல கடல்வாழ் உயிரினங்கள் கப்பல் அனர்த்தத்தால் வெளியான இரசாயனங்களின் தாக்கத்தால் நேரடியாகவோ மறைமுகமாக பாதிக்கப்பட்டு கடலில் சுகவீனத்துடன் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் இருக்கக்கூடும் என்கிறார் அவர்.
எரிந்த கப்பலில் மிகவும் நாசகார இரசாயனப்பதார்த்தங்களைக் கொண்ட பல கொள்கலன்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. எரிந்தவைபோக மிகுதியானவை கடலிலேயே வீழ்ந்துள்ளன .இவற்றில் ஏற்கனவே கடலுடன் கலந்துள்ள இரசாயனப்பதார்த்தங்கள் கடலாமைகள் போன்ற உணர்திறன் கூடிய உயிரிழனங்களில் அதிகளவில் தாக்கம் செலுத்தும்.
அதுமட்டுமன்றி கடலில் இரசாயனப்பதார்த்தங்களின் செறிவு அதிகமாக உள்ள பகுதியிலுள்ள சிறிய கடல்வாழ் உயிரினங்களை கடலாமைகள் போன்றவை உட்கொள்ளும் போது அவற்றின் உணவு செரிமானத்தொகுதியில் நுழைந்து படிப்படியாக தாக்கம் ஏற்படும். இதனால் நோய்வாய்ப்படும் உயிரினங்கள் உடனடியாக உயிரிழக்க மாட்டாது. பல மாதங்கள் கடலிலே நோயுடன் இருந்து உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என்கிறார் கப்புறுசிங்க.