நியூஸிலாந்து நாட்டில் டெல்டா மாறுபாடு அதிகரித்துள்ள நிலையில், முடக்க கட்டுப்பாடுகள் வார இறுதிவரை நீடிக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
நியூஸிலாந்து குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை (27ஆம் திகதி) கொவிட் கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நியூஸிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.
எனினும், டெல்டா மாறுபாடு அதிகரித்துள்ள போதிலும் கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்தை அடையவில்லை என பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘டெல்டா மாறுபாடு தற்போது நாடு முழுவதும் ஒரு சமூக பரவலாக மாற்றமடைந்துள்ளது.
இந்த தொற்றுப்பரவல் உச்சத்தை அல்லது அதன் விளிம்புகளை நாங்கள் அடைந்துவிட்டோம் என்று நாங்கள் இன்னும் நம்பவில்லை’ என கூறினார்.
நியூசிலாந்தில் இன்று திங்கட்கிழமை மேலும் 35 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் புதிதாக இம்மாதத்தில் மட்டும் 107 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 33 புதிய பேர் ஒக்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர் தலைநகர் வெலிங்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிதாக ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய அளவில் முடக்க கட்டுப்பாடுகளை நியூஸிலாந்து அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து, கடந்த வாரத்தில் அதன் மக்கள் தொகையில் சுமார் 3 சதவீத சோதனையை செய்துள்ளது.