கொரோன தொற்றுக்கு எதிரான விதிகளை மீறியது மற்றும் அந்த வைரஸை பரப்பிய குற்றச்சாட்டில் வியட்நாம் ஆடவர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எட்டுப் பேருக்கு ‘ஆபத்தான நோய்த் தொற்றை பரப்பியதாக’ வான் ட்ரி மீது நீதி மன்றம் ஒன்றில் குற்றங்காணப்பட்டுள்ளது. அவரால் நோய் பரப்பப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலம் வரையில் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வியட்நாம் கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வந்தது.
எனினும் வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வைரஸ் திரிபினால் வியட்நாமில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் 530,000க்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 13,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களிலேயே இவர்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக தொற்று சம்பவங்கள் தலைநகர் ஹோ சி மின்-இல் பதிவாகி உள்ளது. இந்நிலையில் 28 வயதான ட்ரி, கடந்த ஜூலையில் தலைநகரில் இருந்து நாட்டின் தெற்கே இருக்கும் தனது சொந்த மாகாணமான கா மவுவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அப்போது அவர் 21 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தும் உத்தரவை மீறியதாகக் கூறப்பட்டது.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் சென்ற தொண்டு அமைப்பு ஒன்றின் ஊழியர்களுக்கு நோய் பரவியுள்ளது.
இது தொடர்பில் ட்ரி மீது நடத்தப்பட்ட ஒருநாள் விசாரணையிலேயே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதோடு 880 டொலர் பெறுமி கொண்ட அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.