இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு ஆலோசனையளிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவால் அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது எனக் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட 8 தமிழ் அரசியல் கைதிகள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு வருகை தந்து, தாம் உள்ளிட்ட சில கைதிகளை சிறைக்கூடத்தில் இருந்து வௌியில் அழைத்து துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்தமையினூடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என அறிவிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டன.
மனுக்கள் தொடர்பிலான எழுத்துமூல ஆட்சேபனையை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதி தரப்பு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம், வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நீதி அமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஆர். அஜித் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாவர்.
இன்றைய வழக்கு விசாரணையில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி மொஹான் பாலேந்திராவின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் மற்றும் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.