ஆசிரியர்கள் போராட்டம் தீர்வின்றி இழுபட்டுச் செல்வதன்காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளமைக்கு ஆசிரியர்கள் அன்றி அரசாங்கமே காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டுகின்றார்.
குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் 24 வருடங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்தைத் தீர்த்து வைக்குமாறு கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் நாடு முழுவதும் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சர்வதேச ஆசிரியர் தினத்தை தேசிய கறுப்பு ஆசிரியர் தினமாக அறிவித்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைகள் சம்மேளனம் மற்றும் ஒன்றிணைந்த சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
நாடளாவிய ரீதியிலுள்ள 312 கோட்டக்கல்வி பணிமனைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ். வலிகாமம் வலயக்கல்வி பணிமனை அமைந்துள்ள மருதனார்மடத்திலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி வவுனியாவிலும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வடக்கு வலய ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு மருக்காரம்பளை பகுதியில் உள்ள கோட்டக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், 10 மணியளவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் தொழிற்சங்கப் போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் நீர்கொழும்பிலும் இடம்பெற்றது. பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஆசிரியர் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மன்னார் மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் மடு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் பண்டாரவளை பஸ் நிலையத்துக்கு அருகே இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை, கொழும்பு உள்ளிட்ட ஏனைய இடங்களிலும் சம்பள முரண்பாட்தைத் தீர்த்து வைக்குமாறு கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
……………