சிங்கள – கிறிஸ்தவ பிரச்சினையை ஏற்படுத்த ஞானசாரர் முயற்சி! – சஜித் அணி குற்றச்சாட்டு

0
345
Article Top Ad

 

“நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள – தமிழ் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள், சிங்கள – முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். தற்போது சிங்கள – கிறிஸ்தவ பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் ஒரு கட்டமாகவே மன்னார் மடுத் தேவாலயத்துக்கு உரித்தான சொத்துக்களைப் பலாத்காரமாகக் கைப்பற்ற ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று சமகால பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

“நாடு பாரிய பொருளாதார பிரச்சினைய எதிர்கொண்டுள்ளது. அதற்கு  முகம்கொடுப்பதற்கு  அரசிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசையில் நிற்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை இறக்குதி செய்வதற்கு டொலர் இல்லை. பால்மா, காஸ், சீனி கொள்வனவு செய்துகொள்ள மக்களை வீதியில் நீண்ட நேரம் நிற்கவைத்திருப்பது குறித்து நாடு என்றவகையில் நாங்கள் வெட்கப்படவேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள இந்த அரசால் இன்று அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இன்று பொருட்களின் விலையைத் தீர்மானிப்பது நிறுவனங்களே. அரசு வெட்கப்படவேண்டும். 18.3 வீத மந்தபோஷனம் உள்ள சிறுவர்கள் இருக்கும் நாட்டில், அந்தப் பிள்ளைகளுக்கு பால்மாவைக்கூட வழங்க முடியாமல் உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கோரும்போது, அந்த மக்களை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதேபோன்று ஞானசார தேரர் மன்னார் மடுத் தேவாலயத்துக்குச் சென்று மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். மடுத் தேவாலயத்தின் காணிகளை பலாத்காரமாக பெற்றுக்கொள்ள முற்படுகின்றார்.

நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள – தமிழ் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள், சிங்கள – முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். தற்போது சிங்கள – கிறிஸ்தவ பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு அரசு இடமளி்க்கக்கூடாது.

மடுத் தேவாலயத்துக்குச் சொந்தமான சொத்துக்களை பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொள்ள ஞானசார தேரர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார். எனவே, உடனடியாக அவருக்கு  எதிராக அரசுஇ நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.
………