“சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அவருக்கு அங்கு ஆபத்து நடந்தால் அரசே முழுப்பொறுப்பு.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ரஞ்சன் ராமநாயக்க கொள்ளை அடித்துவிட்டோ, ஊழல், மோசடியில் ஈடுபட்டுவிட்டோ, சமூக விரோதச்செயலை முன்னெடுத்தோ சிறை தண்டனையை எதிர்கொள்ளவில்லை. மாறாக அரசியல் விடயங்களுக்காகவே தண்டனையை அனுபவிக்கின்றார். நீதிமன்றத் தீர்ப்பை நாம் விமர்சிக்கவில்லை என்பதையும் கூறியாகவேண்டும்.
ரஞ்சன் ராமநாயக்க ஊழல், மோசடிகளுக்கு எதிராகப் போராடியவர். தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவரே கூறியுள்ளார். அதேபோல் கடந்தகாலங்களில் சிறைச்சாலைக்குள்ளேயே கைதிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வெளியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களிலும் அவ்வாறு நடந்துள்ளன. எனவே, ரஞ்சனுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். அவரின் உயிர் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும்.
ரஞ்சன் மக்களால் விரும்பப்பட்ட ஒருவர். எனவே, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இந்தக் கோரிக்கையை விடுத்தோம். மீண்டும் ஒரு முறை முன்வைக்கின்றோம்.
ஜனாதிபதி இதனைச் செய்தால் மக்கள் எதிர்க்கமாட்டார்கள். மாறாக ஜனாதிபதிக்கான புகழ் அதிகரிக்கும்” – என்றார்.