புஷ்வாணமானது பஸிலின் ‘பட்ஜட்’! – சாடுகின்றது தமிழ் முற்போக்குக் கூட்டணி

0
367
Article Top Ad

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முன்வைத்த வரவு – செலவுத்திட்டம் புஷ்வாணத்தைப் போன்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமனா பழனி திகாம்பரம் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

“பட்ஜட் ஒன்று வரும்போது மக்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். இம்முறை அப்படி எந்தவொரு எதிர்பார்ப்பும் மக்களிடம் இல்லை.

மலையகத்தில் லயன்களை இல்லாதொழிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த நிதியே இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கிய நிதியைக் கூட இவர்கள் மலையகத்துக்குச் செலவிடுவார்களா என்ற சந்தேகம் இருக்கின்றது.

காரணம், அரச செலவீனம் 3 ஆயிரத்து 912 பில்லியன் ரூபாவாக இருக்கின்றது. வருமானம் 2 ஆயிரத்து 284 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது. எனவே, எஞ்சிய தொகைக்கு என்ன செய்யப் போகின்றது என்பதற்கு எந்தத் திட்டமும் இந்த அரசிடம் இல்லை.

ஆட்சியிலுள்ள இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், மக்கள் நிலை கவலையாகவே இருக்கின்றது” – என்றார்.