“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கைதி ஒருவர் மாத்தறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவரைக் கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மாத்தறை சிறைச்சாலைக்குச் சென்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள த.நிமலன் என்ற கைதியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று (21) பார்வையிட்டிருந்தனர்.
இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி. கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் என்பவரை மாத்தறை சிறைச்சாலையில் பார்வையிட்டு பேசியிருந்தோம். அவர் சார்ந்த வழக்கில் 3 சந்தேகநபர்கள் இருக்கும் நிலையில் அவரை மட்டும் தனிமைப்படுத்தி மாத்தறை சிறைச்சாலையில் தடுப்பில் வைத்துள்ளார்கள். ஏனைய இருவரும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர் மட்டுமே மாத்தறை சிறைச்சாலையில் உள்ளார். ஒரேயொரு தமிழ்க் கைதியாகவும் இந்தச் சிறைச்சாலையில் அவரே உள்ளார். அவருக்கு மொழி சார்ந்த வசதிகளும் குறைவாக உள்ள நிலையில் அவர் எம்மிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஏனையவர்களைத் தடுத்துவைத்துள்ள சிறைச்சாலைகளில் தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். அது சம்பந்தமாக நாங்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் பேசுவோம்.
அத்துடன், கைதிகளை விடுவிப்பதற்குரிய அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் கொடுப்போம். அதேசமயம் அது நிறைவேறும் வரை இந்தக் கைதிகளை அவர்களது சொந்த மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். தொடர்சியாக இந்த வரவு – செலவுத் திட்டக் காலப்பகுதியில் கூட உரிய அமைச்சுக்குக் கீழ் வரக்கூடிய விடயங்களை வலியுறுத்துவோம் என்பதையும் அவருக்குத் தெரிவித்துள்ளோம்” – என்றார்.
…………………………