நினைவேந்தல் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு

0
343
Article Top Ad

“இலங்கையில் போரின்போதும் வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை – அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு நீதிமன்றங்கள் ஊடான தடையுத்தரவைப் பொலிஸார் பெற்று வருகின்றனர். இது இந்த அரசின் திட்டமிட்ட செயல் என்று தமிழ் அரசியல்வாதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சி அரசில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் அனுமதி ஏன் மறுக்கப்படுகின்றது எனவும் தமிழ் அரசியல்வாதிகள் சீற்றத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் கடந்த காலங்களில் போரின்போதும் வன்முறைகளின்போதும் பலர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களை இன ரீதியிலோ அல்லது மத ரீதியிலோ பிரித்துப் பார்க்கக்கூடாது. அனைவரும் மனிதர்கள்.

உயிரிழந்தவர்களின் வலி அவர்களின் உறவுகளுக்குத்தான் தெரியும். அதில் எவரும் அரசியல் நடத்தக்கூடாது.

உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை, அவர்களின் உறவுகள் நினைவேந்துவதை எவரும் தடுக்கவே முடியாது” – என்றார்.