பட்ஜெட்டிற்கு ஆதரவாக வாக்களித்த 3 மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

0
186
Article Top Ad

கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகிய மூவரும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் எம்.பிக்கள் நால்வரும், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என நேற்று (21) இடம்பெற்ற, கட்சி அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் (22) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த 3 எம்.பிக்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான இன்றைய வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களித்திருந்ததோடு, அக்கட்சியைச் சேர்ந்த ஏனைய நால்வரில் 3 எம்.பிக்கள் அதற்கு ஆதராவக வாக்களித்திருந்தனர்.

திருகோணமலை மாவட்ட எம்.பி. எம்.எஸ். தெளபீக் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

2022 வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3ஆம் வாசிப்பின் மீதான விவாதம் நாளை (23) ஆரம்பிக்கப்படவுள்ளதோடுஇ 2022 வரவுச் செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.