கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற படகு விபத்தானது, அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. சபையில் சுட்டிக்காட்டினார்.
குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் நேற்று சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதன்போது, அரசின் அசட்டை காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
மேலும், முறையான வகையில் அந்தப் படகு பாதை சேவை நடைபெறவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே கிண்ணியாவில் இந்தத் தரமற்ற தற்காலிக படகுப் பாதை இயங்கியுள்ளது எனவும், இது தொடர்பில் உடனடி விசாரணை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, கிண்ணியா படகு பாதை குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டியபோதும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என இம்ரான் மஹ்ரூப் எம்.பி. தெரிவித்தார்.
…….
படகுப் பாதை விபத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்துக! – சஜித் வலியுறுத்து
கிண்ணியாவில் இடம்பெற்ற ‘படகுப் பாதை’ விபத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, நிமல் லன்சா அந்தப் பகுதியில் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிய போதும், அது தொடர்பான வேலைத்திட்டம் ஸ்தம்பிதமடைந்திருந்தது என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அங்கு மக்கள் பயணிப்பதற்கான படகுப் பாதை விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேபோன்று குறித்த படகுப் பாதை இயங்கிய முறை மற்றும் அதன் சட்டப்பூர்வ தன்மை ஆகியன குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ சபையில் வலியுறுத்தினார்.