இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை! – அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு

0
153
Article Top Ad

இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், அதிக மழையால் பாதிக்கப்பட்ட மரக்கறிச் செய்கைக்காக விசேட உரத்தைக் கொண்டுவரவும் மற்றும் கிருமிநாசினிகளைக் கொண்டு வருவதற்குமே தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும்  விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஜனாதிபதி, விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உரம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகையில்,

“இரசாயன உரத்தைக் கொண்டு வருவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இரசாயன உர இறக்குமதிக்காக ஜனாதிபதி செயலகத்தால் எந்தவித உத்தரவும் வெளியிடப்படவில்லை. அவ்வாறு எந்தவித வர்த்தமானியும் வெளியிடப்படவில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட மரக்கறி செய்கைகளுக்காகக் கிருமி நாசிகனிகளையும் மற்றும் விசேட உரத்தையும் கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர வேறு எதனையும் கொண்டுவரத் தீர்மானிக்கப்படவில்லை” – என்றார்.