‘இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு’ – முல்லைத்தீவு நீதிமன்றம் திருத்திய கட்டளை

0
173
Article Top Ad

‘இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அந்த அமைப்பின் கொடிகள், அடையாளங்களைப் பிரதிநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவுகூர முடியும்.”

– இவ்வாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினுடைய நிகழ்வு ஒன்றாக நினைவுபடுத்தக் கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளாது இறந்தவர்களுக்குப் பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும் என்று மாவீரர் நாள் தடைக் கட்டளையை இன்று (25) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் திருத்திய கட்டளையாக்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17 மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 7 பொலிஸ் பிரிவுகளில் மாவீரர் நாளை நினைவுகூர வழங்கப்பட்டிருந்த மாவீரர் நாள் தடை உத்தரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், குகனேசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் முல்லை ஈசன் ஆகியோர் சார்பாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் மூலம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் திருத்திய கட்டளையை அவர் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையம், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம், மல்லாவி, ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய 5 பொலிஸ் பிரிவுகளில் மாவீரர் நாள் நினைவு நிகழ்வை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இந்த ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவை திருத்திய கட்டளையாக்கி முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் வி.எஸ்.எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நிதியானந்தராஜா ஆகியோர் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து வாதங்களை மேற்கொண்டனர்.

வாதங்களைக் கேட்ட மன்று ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவை திருத்திய கட்டளையாக்கி உத்தரவிட்டுள்ளது.