ஸிம்பாப்வேயில் இடம்பெற்று வரும் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் இரத்து செய்யப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
ஆபிரிக்க கண்டத்தின் தென் பிராந்திய நாடுகளில் Covid-19 தொற்றின் புதிய பிறழ்வாகிய Omicronபரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்இ மீதமுள்ள தகுதிச்சுற்று போட்டிகள் பிறிதொரு தினத்தில் நடத்தப்பட மாட்டாது எனவும் பேரவை அறிவித்துள்ளது.
தகுதிச்சுற்றின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டிய எஞ்சிய மூன்று நிலைகளுக்குமான மகளிர் அணிகள் ICC தரப்படுத்தலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பங்களாதேஷ், மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
நியூஸிலாந்து, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இந்தத் தொடருக்கு ஏற்கனவே தகுதி பெற்றிருந்த அணிகளாகும்.
கடந்த 27ம்திகதி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த தகுதிச்சுற்றுப் போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.