கரீபியன் தீவு நாடான பார்படோஸ், பிரிட்டிஷ் முடியாட்சியுடனான பல நூற்றாண்டு உறவை முறித்து உலகின் புதிய குடியரசாக அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுடன் இரண்டாவது எலிசபத் மகாராணி அந்நாட்டு அரச தலைவர் அந்தஸ்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தலைநகர் பிரிஜ்டெளனில் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச கொடி இறக்கப்பட்டு தற்போதைய ஆளுநர் சன்ட்ரா மேசன் முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
இராணுவ அணிவகுப்பு துப்பாக்கி மரியாதை, நடனம் மற்றும் வாணவேடிக்கையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் பங்கேற்றார்.
சுமார் 300,000 மக்கள் வசிக்கும் பார்படோஸ் 1966 ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
1620 தொடக்கம் பிரிட்டன் காலனியாக இருந்த இந்த நாடு ஆயிரக் கணக்கான அடிமையாக்கப்பட்ட ஆபிரிக்கர்களை கொண்ட பிரிட்டன் குடியேறிகளின் சீனி உற்பத்தி காலணியாக இருந்து வந்தது. 1834 இல் அடிமை நிலை நீக்கப்பட்டது.
எனினும் காலனித்துவம் மற்றும் பிரிட்டிஷ் செல்வாக்கு பற்றி பார்படோஸில் அண்மைக்காலத்தில் விவாதங்கள் இடம்பெற்று வந்தன.