இஸ்ரேலில் இன்று திங்கட்கிழமை நடந்த பிரபஞ்ச அழகி ( Miss. Universe) போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து (21 )மகுடம் சூடினார்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப் பட்டம் இந்தியா வசமானது. கடைசியாக 2000வது ஆண்டில் லாரா தத்தா பிரபஞ்ச அழகி கிரீடத்தைத் தட்டிச் சென்றிருந்தார்.
பிரபஞ்ச அழகிப் பட்டத்தை இந்தியா வென்றிருப்பது இது மூன்றாம் முறை. முதன்முறையாக 1994ஆம் ஆண்டில் நடிகை சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகியாகத் தேர்வுபெற்றார்.
பஞ்சாப்பில் பிறந்த வளர்ந்தவரான ஹர்னாஸ் இப்போது பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார்.
தமது 17வது வயதில் இருந்து அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டுவரும் ஹர்னாஸ் 2017ஆம் ஆண்டில் ‘மிஸ் சண்டிகர்’ பட்டத்தையும் அதற்கு அடுத்த ஆண்டில் ‘மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார்’ பட்டத்தையும் வென்றிருந்தார்.
இப்போது பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடியுள்ள ஹர்னாஸ் இனி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியிருந்து பல அனைத்துலக நிகழ்ச்சிகளில் பங்குகொள்வார்.
பிரபஞ்ச அழகிப் போட்டி நடத்தப்பட்டது இது 70வது முறை. இஸ்ரேலில் இப்போட்டி நடைபெற்றது இதுவே முதன்முறை.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நெருக்குதலை மீறி மொத்தம் 80 நாட்டு அழகிகள் இதில் பங்கேற்றனர்.
பராகுவே நாட்டின் நாடியா ஃபெரேரா இரண்டாமிடத்தையும் தென்னாப்பிரிக்காவின் லலேலே மெஸ்வேன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.