“மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்தச் செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும்.”
– இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. ஆனால், நாம் எதிர்ப்பார்த்தளவு அதனைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு நாம் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததே காரணம்.
எனவே, இந்த நிலைமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், எதிர்காலத்தில் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்காமல் இருப்பதற்கும் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு கோருகின்றோம்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறமுடியும்” – என்றார்.