பேச்சு சுதந்திரம் தேசத் துரோக செயலுக்கான  திறந்த உரிமம் என்று நினைக்கவே வேண்டாம் -சிவாஜிக்கு ஆளுநர் ஜீவன் இப்படிப் பதிலடி

0
145
Article Top Ad

“பேச்சு சுதந்திரம், இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது என்பதற்காகத் தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கின்றது எனத் தவறாக நினைக்க வேண்டாம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ‘வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் உள்ளனர். இவர்களுக்காகப் பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகின்றன. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவுக்காகப் பல இலட்சம் ரூபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்’ என்று தெரிவித்திருந்தார்.

அந்நிலையில், அதற்குப் பதில் வழங்கும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் செய்திக் குறிப்பொன்றை நேற்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஆளுநரின் ஊழியர்கள், மாகாண நியமன ஊழியர்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகின்றார். அதற்காக நேர்மையாகப் பணியாற்றுகின்றார்.

இங்குள்ள சிலர் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படைச் சுதந்திரங்கள் உண்டு. அவற்றை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அந்தச் சுதந்திரங்களைப் பயன்படுத்தி தேசத் துரோக செயல்களில் ஈடுபட முடியாது” – என்றுள்ளது.
….