திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எல்லே குணவங்க தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தர்ஷன வேரதுவவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் முதலாவது பிரதிவாதியாக ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
நிதியமைச்சர்இ பாதுகாப்பு அமைச்சர், எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம், திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட 47 பேர் மனுவின் ஏனைய பிரதிவாதிகளாவர்.
இந்த மனுவை பரிசீலிப்பதற்கு பூரண நீதியரசர் குழாமை நியமிக்குமாறு கோரும் மனுதாரர்கள், இதனூடாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய வளங்களை பாதுகாத்தல் மற்றும் முறைகேடான பாவனையை தடுப்பதற்காக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பில் கடந்த ஜனவரி 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானித்தமையினூடாக அமைச்சரவை, ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதுடன்இ மக்கள் அரசாங்கம் மீது கொண்டிருந்த நம்பிக்கை சீர்குலைந்துள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உடன்படிக்கை வௌிப்படைத்தன்மையின்றி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் குதங்கள் தொடர்பில் முறையான மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லையெனவும் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க அரசாங்கத்தின் இந்த அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானதென மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித தேரர் சட்டத்தரணி சுனில் வட்டகலவின் ஊடாக கடந்த 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.