இந்தியாவில் சா்வதேச விமானப் போக்குவரத்து மீதான தடை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி முதல் அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் 2020 ஜூலை முதல் சிறப்பு ஏற்பாடுகளுடன் சுமாா் 40 நாடுகளுக்கு சா்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சா்வதேச விமான சேவைக்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
எனினும் சா்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அனுமதிக்கப்படும் விமானங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் சிறப்பு ஏற்பாடுகளுடன் இயங்கும் விமான சேவையும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி முதல் மீண்டும் செயற்படுவதாக இருந்தது.
இந்நிலையில் நாட்டில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா பரவத் தொடங்கியதால் விமான சேவையை தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் முடிவு இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.