இலங்கைக்கும் ஜப்பானிற்கும் இடையிலான இராஜந்திர உறவு ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் இவ்வருடத்தில் பூர்த்தியாவதை முன்னிட்டு ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்றையதினம் ஏற்பாடுசெய்யப்பட்டியிருந்தது. இதன்போது இலங்கை அரசாங்கத்தரப்பை பிரதிநிதித்துவப் படுத்தி பங்கேற்ற பலரும் ஜப்பானுடனான உறவை வெகுவாகப் புகழ்ந்துபேசினர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பேசியபோது ஜப்பான் எப்போதுமே இலங்கையின் தேவையை அறிந்து உதவிகளை வழங்கிய நாடு என்று குறிப்பிட்டார். வேறுநாடுகள் இலங்கைக்கு உதவிகளைச் செய்யும் போது இந்த இந்த தேவைக்காக மட்டுமே தமது உதவிகளைப் பயன்படுத்தவேண்டும் என்று நிபந்தனை விதிப்பர். ஆனால் ஜப்பான் ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை . ஜப்பான் உதவிகளை வழங்கும் போது இலங்கை அரசாங்கம் நினைத்தவாறு தேவையான திட்டங்களில் அதனைப் பயன்படுத்த இடமளிக்கும் என்றார்.
ஜப்பான் பற்றி மிகவும் புகழ்ந்து பலரும் உரையாற்றியதையடுத்து கேள்வி களுக்கான நேரம் வழங்கப்பட்டது. அதன் போது குளோப் தமிழ் ஆசிரியர் எழுப்பிய கேள்வி’ அமைச்சரே நீங்கள் உங்கள் உரையில் ஜப்பானை வெகுவாகப் புகழ்ந்தீர்கள். அப்படியென்றால் எதற்காக ஜப்பான் அனுசரணையில் முன்னெடுக்கப்படவிருந்த இலகு இரயில் திட்டத்தைக் கைவிட்டீர்கள் ? என்று வினவினேன்.
கேள்வியை அடுத்து அங்கிருந்த அரச பிரதிநிதிகள் பலரும் முகபாவனையாலும் உடல் அசைவாலும் இந்தக்கேள்வியை இங்கு கேட்டிருக்கக்கூடாது பின்னர் பார்க்கலாம் என்ற வகையில் தட்டிக்கழிக்க முனைந்தபோது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ‘ இந்தவிடயத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவேண்டும் .நான்இதற்குப் பதிலளிக்கின்றேன் என்று கூறி இவ்வாறு பதிலளித்தார்.
“காலத்திற்கு காலம் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அவை மீள்பரிசீலனை செய்யப்படுவதுமுண்டு. சில சூழ்நிலைகள் மேலும் சிறப்பான முறையில் கையாளப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை எனக்கு எவ்விதமான தீங்கும் இல்லை என நான் நினைக்கின்றேன். யாருமே பரிபூரணமானவர்கள் என்று தம்மை உரிமைகோரமுடியாது’ என்றார்.