தமிழ் மக்களை ஜனாதிபதி அவமதித்துள்ளார் – சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

0
252
Article Top Ad

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரப் பகிர்வு வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சில வசதிகளை மட்டுமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் அதனைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்போம்; நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்க உரையில் கூறி தமிழ் மக்களை அவமதித்துள்ளார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இறுதியாகக் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நடத்த அதிக நேரம் வேண்டும் என நாம் வாதிட்டோம்.  ஆனால் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையைக் கேட்ட பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாம் அதிக நேரம் கேட்டு வாக்குவாதப்பட்டது வீணானது என்றே கருதுகின்றேன்.

கொள்கை என எதுவுமே இல்லாத உரை என்றே ஜனாதிபதியின் உரையைக் கூற வேண்டும். ஜனாதிபதியின் உரையில் நாட்டிலுள்ள மற்றும் மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறிய போதிலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என எதனையும் அவர் கூறவில்லை.

ஜனாதிபதி தனது  உரையில் ஒரு சில விடயங்களைக் கூறியுள்ளார். குறிப்பாக மிக மோசமான நாணய நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளோம். பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் நாம் உள்ளோம், இதற்கான தீர்வுகளைக் காண கடந்தகால அரசுகள் தோல்வி கண்டுள்ளன எனக் கூறினார்.

இறுதியாக இருந்த அரசை  மட்டுமல்ல அதற்கு முன்னர் இருந்த அரசுகளையும் ஜனாதிபதி குறை கூறியுள்ளார். இதற்கு முன்னர் இருந்த அரசுகளில் இரண்டு அரசுகளுக்கு மஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாகத் தலைமை தாங்கினார்.

ஆகவே இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மஹிந்த ராஜபக்சவின் அரசும் காரணம் என்பதையும் மஹிந்த ராஜபக்ச அரசும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளது என்பதையுமே ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரச்சனையை இனங்கண்டு அதனை மஹிந்த ராஜபக்சவின் தோளில் சுமத்தியுள்ளாரே தவிர இந்த நெருக்கடிக்குத் தீர்வு என்ன எந்தப் பாதையில் பயணித்து இந்த நெருக்கடிகளில் இருந்து மீளப்போகின்றோம் என்ற தீர்வுகளை  முன்வைக்கத் தவறியுள்ளார்.

அவரது உரையை நான் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சில குறுஞ்செய்திகள் வெளிவந்தன. அதனைப் பார்க்கும்போது மேலும் 500 மில்லியன் டொலர்கள் எமது பிச்சைப் பாத்திரத்தில் போடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இதுவொரு நாளாந்தச் செயற்பாடாக மாறிவிட்டது. கையில் பிச்சைப்  பாத்திரத்தை ஏந்திக்கொண்டு யாரும் பிச்சையிடுவார்களா? எனக் காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று எமது நிலையாக மாறியுள்ளது. அடுத்த கட்டத்தில் என்ன செய்யப்போகின்றோம்? என்பது தெரியாத நிலைமை உருவாகியுள்ளது.

அதேபோல் இந்த நாடாளுமன்றத்தில் வெவ்வேறு மக்களின் பிரதிநிதிகள் வெவ்வேறு ஆணையுடன் உள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மக்களின் விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பில் அரசு கவனம் செலுத்துவதாகவும், வடக்கு, கிழக்கு மக்களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார்.

எமது மக்கள் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரப் பகிர்வு, ஆட்சி என்பவற்றைக் கேட்டு நிற்கின்றனர். ஆனால் வெறுமனே வசதிகளை மட்டும் எமது மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதனைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறுவதையும் நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு எனவும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு இது எனவும் கூறுவதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தமது அரசியல் சித்தாந்தத்தைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் சித்தாந்தம் என்பது எமது கொள்கை. அது எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை. அதனை ஓரமாக வைத்துவிட்டு உங்களின் கருத்தை செவிமடுக்க நாம் தயாரில்லை என்றார்.