நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம் வவுனியா மாவட்ட செயலகத்துக்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம்

0
118
Article Top Ad

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலக வளாகத்துக்குள் நுழைய முற்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸார் குவிக்கப்பட்டு முறுகல் நிலை ஏற்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா  மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “நீதி அமைச்சால் நீதி கிடைப்பதில்லை, கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும், செயல் திறனற்ற ஓ.எம்.பியை நம்பிக் காலத்தைக்  கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும், கறுப்புக் கொடிகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற மாவட்ட செயலக வளாகத்துக்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்டபோது பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அவ்விடத்தில் இருந்து வெளியேற்ற கடும் பிரயத்தனம் செய்தனர். பொலிஸார் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இருப்பினும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சில தாய்மார் கதறியழுது மயங்கி விழுந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றதையடுத்து நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் மாவட்ட செயலக வாசலுக்குச் சென்று கலந்துரையாடியதுடன், அவர்களைத் தமது நடமாடும் சேவைக்கு வருமாறும் அழைத்தனர். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.