இலங்கையின் சுதந்திர நாள் தமிழ்த் தேசத்தின் கரிநாள் – முள்ளிவாய்க்காலில் இன்று மாபெரும் போராட்டம்

0
354
Article Top Ad

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ்த் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க உப செயலாளர் இரதீஸ்வரன் சபிதா உள்ளிட்டவர்கள் இந்த அழைப்பை விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள் –

பெப்ரவரி 4 ஆம் நாள் இலங்கையின் சுதந்திர தினத்தை முழுமையாக பகிஷ்கரித்து அது தமிழர் தேசத்தின் கரிநாள் என்ற அடிப்படையில் தமிழர்களாக சுயர்நிர்ணயத்திற்காக போராடி வருகின்ற மக்களாக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம்.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் ஒன்றுகூடி தமிழர் தேசத்தின் கரிநாள் என்ற தொனிப்பொருளில் எங்கள் உணர்வுகளையும் உரிமைக்கான குரலினையும் எடுத்துக்காட்டவேண்டும்.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் தலைமையேற்று போராட்டத்தை நடத்த இருக்கின்றார்கள். எந்த இடத்தில் எங்கள் இன அழிப்பு நடைபெற்றதோ, எந்த இடத்தில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்தார்களோ எந்த இடத்தில் எங்கள் போராட்டம் மௌனிக்கப்பட்டதோ அந்த இடத்தில் இருந்து நாங்கள் மீண்டும் எழுவோம்.

முள்ளிவாய்க்கால் மண் எங்கள் இனத்தின் பரிகார நீதிக்கான ஆரம்ப இடமாக அமைந்துள்ளது. எங்கள் உறவுகளை நாங்கள் கையளித்தோம். அதற்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. நீதி கேட்டு எங்கள் தாய்மார்கள் நீண்டகாலமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இன்று முள்ளிவாய்க்கால் முற்றம் தொடங்கி வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகர்வரை பேரணி இடம்பெறும் – என்றார்.