கூட்டமைப்பு அரசியல்வாதிகள் குருந்தூர்மலையில் வழிபாடு

0
309
Article Top Ad

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இரா.சாணக்கியன் மற்றும் அரசியல்வாதிகள், பற்றாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை – குருந்தூர்மலை சிவன் ஆலயப் பகுதியை பௌத்த விகாரை தலமாக பிரகடனப்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கு விகாரையையும் அமைத்து வருகின்றது.

இந்த நிலையில், அங்குள்ள பிக்கு ஒருவர் தொல்பொருள் திணைக்களம் மற்றும்  படையினரின் ஆதரவுடன் தமிழ் விவசாயிகளை பயிர்ச் செய்கை மேற்கொள்ள விடாது தடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சுதந்திர நாளில் குருந்தூர் மலைக்குச் செல்லவுள்ளாதாக சுமந்திரன் அறிவித்திருந்தார்.

இதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை காலை குருந்தூர் மலைக்கு சுமார் 75 பேர் வரையிலானோர் சென்றனர். அங்கு சென்றவர்களை இராணுவத்தினர் வழிமறித்திருக்கவில்லை.

இதைத் தொடர்ந்து சிவன் ஆலயப் பகுதியில் அவர்கள் வழிபட்டனர். பின்னர் அங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

‘உள்நாட்டுப் பொறிமுறையில் ஒரு தீர்வும் கிடைக்காது என காலாகாலமாக நாம் கூறி வருகிறோம். சுதந்திர தினமான இன்று எமது மத உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் எதிர்ப்பைக் காண்பிக்கும் முகமாக குருந்தூர் மலைக்கு வந்துள்ளோம்’, என்றார்.