அம்பிகாவின் கருத்து புலிகளின் பிரசாரத்தை நினைவூட்டுகின்றது – கவனம் செலுத்தப்படும் என்கிறது வெளிவிவகார அமைச்சு

0
245
Article Top Ad

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்து தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எனவே, அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்றினால் அனைவரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சலுகையை இலங்கை இழந்தால், அதனால் பல இழப்புக்கள் ஏற்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை வழங்கி வருகின்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்தோடு சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் வசம் இருந்த தனியார் காணிகளில் 92 வீதத்திற்கும் அதிகமானவை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவற்றை கையளிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.