U19 உலகக் கிண்ண பெறுமதிக்க அணியில் துனித் வெல்லாலகே

0
331
Article Top Ad

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த ஐசிசி இன் 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மிகவும் பெறுமதி மிக்க வீரர்களைக் கொண்ட 19 வயதின் கீழ் உலக அணியில் இலங்கை அணியின் தலைவர் துனித் வெல்லாலகே இடம்பிடித்துள்ளார்.

ஐசிசி இன் 14 ஆவது 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது மேற்கிந்தியத் தீவுகளில் நேற்றுமுன்தினம் நிறைவுக்கு வந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய 19 வயதின் கீழ் உலக அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றிய 16 நாடுகளில் 8 நாடுகளைச் சேர்ந்த 12 வீரர்கள் ஐசிசி இனால் அறிவிக்கப்பட்டுள்ள 19 வயதின் கீழ் உலக அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்களும், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா 2 வீரர்கள், இலங்கை, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் 19 வயதின்கீழ் உலக அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த அணியின் தலைவராக இந்திய அணியின் தலைவராக செயல்பட்ட யாஷ் துல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்த விக்கி ஓட்ஸ்வால், ராஜ் பாவா ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

அத்துடன், இந்த அணியில் இலங்கை அணித் தலைவரான சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவ் அணியில் பிரதான சகலதுறை வீரராக இடம்பெற்றுள்ள துனித் வெல்லாலகே, 6ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

இம்முறை 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சகலதுறைகளிலும் பிரகாசித்த அவர், 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார். இதில் இரண்டு 5 விக்கெட் குவியல்கள் அடங்குகின்றன.

இவர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி ஒரு சதம், ஒரு அரைச் சதத்துடன் மொத்தமாக 264 ஓட்டங்களைக் குவித்ததுடன், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஐசிசி இனால் அறிவிக்கப்பட்டுள்ள பெறுமதிக்க 19 வயதின்கீழ் உலக அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்:

  1. ஹசீபுல்லா கான் (பாகிஸ்தான் – விக்கெட் காப்பாளர் – 2 சதங்கள் உட்பட 380 ஓட்டங்கள், 8 ஆட்டமிழப்புகளில் பங்களிப்பு)
  2. டேகு வில்லி (அவுஸ்திரேலியா – 278 ஓட்டங்கள்)
  3. டிவோல்ட் பிரேவிஸ் (தென்னாபிரிக்கா – 506 ஒட்டங்கள், 7 விக்கெட்டுகள்)
  4. யாஷ் துல் (தலைவர் – இந்தியா – 229 ஓட்டங்கள்)
  5. தோமஸ் ப்ரெஸ் (இங்கிலாந்து – 292 ஓட்டங்கள்)
  6. துனித் வெல்லாலகே (இலங்கை – 246 ஓட்டங்கள், 17 விக்கெட்டுகள்)
  7. ராஜ் பாவா (இந்தியா – சகலதுறை வீரர் – 252 ஓட்டங்கள், 9 விக்கெட்டுகள்)
  8. விக்கி ஒட்ஸ்வால் (இந்தியா – 12 விக்கெட்டுகள்)
  9. ரிப்பொன் மொண்டொல் (பங்களாதேஷ் – 14 விக்கெட்டுகள்)
  10. அவைஸ் அலி (பாகிஸ்தான் – 15 விக்கெட்டுகள்)
  11. ஜோஷ் பொய்டன் (இங்கிலாந்து – 15 விக்கெட்டுகள்)
  12. நூர் அஹ்மட் (ஆப்கானிஸ்தான் – 10 விக்கெட்டுகள்)