சடலங்களாக கரை ஒதுங்குவதுதானா வடக்கு மீனவர்களின் விதி?

0
382
Article Top Ad

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, வத்திராயன் பகுதியில் இருந்து கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 27ஆம் திகதி) சிறிய படகொன்றில் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், நான்கு நாட்களின் பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டனர். கடலுக்குச் சென்றவர்கள் அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பாததை அடுத்து, அவர்களைத் தேடும் பணியை அந்தப்பகுதி மீனவர்கள் முன்னெடுத்தனர். அதன்போது, அவர்களின் வலைகள் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அதனையடுத்து, தேடுதலை இன்னும் விரிவுபடுத்திய வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக இரவு பகலாக இயங்கினர். ஆனாலும், காணாமற்போன மீனவர்களை மீட்க முடியவில்லை. மாறாக, கடந்த 31ஆம் திகதி திங்கட்கிழமை இருவரது சடலங்களையும் காண நேர்ந்தது. வடமராட்சிக் கிழக்கின் கேவில் மற்றும் ஆழியவளை ஆகிய பகுதிகளில் அவை கரை ஒதுங்கின.

இரு மீனவர்களினதும் மரணம், இந்திய இழுவைப் படகுகளினால் நிகழ்த்தப்பட்டதாக வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஏனெனில், வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வலைகள், வழக்கமாக இந்திய இழுவைப் படகுகளினால் வெட்டப்படும் வலைகளை ஒத்தனவாக இருந்திருக்கின்றன. சிறிய படகில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் வடக்கு மீனவர்களுக்கு, இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன. இழுவைப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியிருப்பதாக வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இரு மீனவர்களும் காணாமற்போன நாட்களில் இந்திய இழுவைப் படகுகள், வடமராட்சிக் கடற்பரப்பில் கூப்பிடு தொலைவு வரை வந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

காணாமற்போன மீனவர்களின் சடலங்கள் மீட்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால், அந்த மீனவர்களின் வீட்டுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார். அன்றும் வடமராட்சிக் கிழக்கின் கரைகளுக்கு அண்மித்து இந்திய இழுவைப் படகுகள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. கடற்றொழில் அமைச்சர், பயணித்த வடமராட்சிக் கிழக்கு கடற்கரை வீதியில் இருந்து பார்த்திருந்தாலே அதனை அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

இரு மீனவர்களின் மரணத்தை அடுத்து, வடமராட்சி சுப்பர்மடம் பகுதி மீனவர்கள் பருத்தித்துறை – பொன்னாலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அத்தோடு, அன்று வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த இந்திய இழுவைப் படகுகள் இரண்டினை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்த இரண்டு இழுவைப் படகுகளையும் சுப்பர்மடம் மீனவர்களிடம் இருந்து மீட்ட கடற்படை, அந்தப் படகுகளை தாங்களே பிடித்தது போன்று, நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருக்கின்றது.

வடக்கு கரையோரங்கள் முழுவதும் இலங்கைக் கடற்படையின் நூற்றுக்கணக்கான காவலரண்களும், பல பாரிய முகாம்களும் காணப்படுகின்றன. அந்த முகாம்களில் அதிகமானவை கரையோர மீனவர்களின் காணிகளில் அத்துமீறி அமைக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் ஏனைய கடற்பரப்புக்களை விடவும் வடக்கு கடற்பரப்பு அச்சுறுத்தல் அதிகமுள்ளது என்பதை கடற்படையும், அரசாங்கமும் தொடர்ச்சியாக கூறி வந்திருக்கின்றன. அதனால்தான், ஒரு சில கிலோமீற்றர் தூரத்துக்குள்ளேயே பல காவலரண்களை கடற்படை அமைத்துமிருக்கின்றது. அந்தக் காவலரன்களிலும், பாரிய முகாம்களில் இருந்தும் கடலை கண்காணிப்பதுதானே, கடற்படையின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பணியை கடற்படை சரியாக செய்வதில்லை. அவர்களின் கண் முன்னாலேயே இந்திய இழுவைப் படகுகள் தொழில் நடவடிக்கைகளில் எந்தவித பயமும் இன்றி ஈடுபடுகின்றன. வடக்கு மீனவர்கள், இந்திய இழுவைப் படகுகளை பிடிக்க முற்படும் தருணங்களிலும் இன்னும் சில தருணங்களிலும்தான், கடற்படை செயற்படுவது போல காட்டிக் கொள்கின்றது.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் பாராளுமன்றத்தில் இழுவை மடித் தடைச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தச் சட்டமூலம், இலங்கை கடல் வளங்களை பாதுகாக்கும் நோக்கில், மீனவர்களின் வேண்டுகளின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பாரிய இழுவைப் படகுகள், தங்களது பாரிய மடிகளை கடலின் அடி ஆழம் வரை விரித்து கடல் வளங்களை சூறையாடுகின்றன. அதனால், மீன் உற்பத்தி அழிக்கப்படுகின்றது. இது, கடலை நம்பி பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் மீனவர்களை பாதிக்கின்றது. அதனாலேயே, தங்களது கடல் தாயை பாதுகாக்கும் நோக்கில் வடக்கு மீனவர்களில் 95 வீதமானவர்கள் இழுவை மடி தொழில் முறையை எதிர்கின்றனர். அல்லது, அவர்களினால் பாரிய இழுவைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க தெரியாமல் இல்லை.

அப்படியான நிலையில், பாரிய போராட்டங்களில் பின்னால் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற இழுவை மடி தடைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தினாலேயே, வடக்கு மீனவர்களின் பெரும் பிரச்சினையொன்று தீர்வுக்கு வந்துவிடும். ஏனெனில், எல்லை தாண்டி வந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களில் 90 வீதமானவர்கள், பாரிய இழுவை மடித் தொழிலேயே ஈடுபடுகின்றனர்.

ஒரு நாட்டின் சட்டம், தன்னுடைய சட்ட எல்லைக்குள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். அப்படியான நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி இழுவை மடிகளை விரித்து கொள்ளையடிக்கும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க முடியும். ஆனால், கடற்றொழில் அமைச்சரோ, அரசாங்கமோ இழுவை மடித் தடைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

அதற்கு, தென் இலங்கையின் இனவாத அரசியல் சிந்தனை பிரதான காரணமாகும். வடக்கு மீனவர்களும் இந்திய மீனவர்களும் மோதிக் கொள்ளும் நிலையைப் பேணுதல் என்பது, ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை அதிகரிக்கும் நோக்கிலானது.

அடிப்படையில், ஈழத்தமிழர்களும், தமிழக தமிழர்களும் இலங்கை இந்திய மீன்பிடி பிரச்சினையை வைத்து முரண்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஏனெனில், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தல் என்கிற பெயரில் கடற்கொள்ளையில் இடுபடும் இழுவைப் படகுகளில் அநேகமானவை பெரு முதலாளிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் சொந்தமானவை. தமிழக மீனவர்களில் அதிகமானவர்களும் கூட இழுவை மடி தொழில் முறைக்கு எதிரானவர்களே. அப்படிப்பட்ட நிலையில், பெருமுதலாளிகள் சிலர் தின்று கொழுப்பதற்காக கடல் வளம் அழிக்கப்படுகின்றது.

நாட்டில் ஆயுதப் போராட்டம் நீடித்த சுமார் முப்பது ஆண்டுகளாக வடக்கு மீனவர்களின் தொழில் முடங்கிப் போயிருந்தது. அப்போதும் இந்திய இழுவைப் படகுகளே வடக்கு கடற்பரப்பை சூறையாடிச் செல்ல எத்தனித்தன. ஆனால், ஒரு கட்டத்தில் அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது, தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எந்தவித பிரச்சினையும் முரண்பாடுகளும் ஏற்படவில்லை.

ஏனெனில், நியாயமான நடைமுறைகளைப் பேணுவதால் யாரும் மனம் நோகவேண்டியதில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர், இந்திய இழுவைப் படகுகள் ஆயிரக்கணக்கில் வடக்கில் கரைகளில் நாட்கணக்கில் நின்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தன. இவ்வாறான நெருக்கடிகளுக்கு எதிராக கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக போராடியே வந்திருக்கிறார்கள்.

வத்திராயன் மீனவர்களின் மரணத்தை அடுத்து வடமராட்சிக் கிழக்கு மக்கள், மருதங்கேணி பிரதேச செயலகத்தை முடக்கி போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர். அப்போது, அங்கு வந்த கடற்றொழில் அமைச்சர், இந்திய அதிகாரிகளுடன் பேசியிருப்பதாகவும், இறந்த மீனவர்களுக்கு நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், தமக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக எழுத்து மூல உத்தரவாதத்தினை வழங்குமாறு வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் கோரினார்கள். ஆனால், அவ்வாறான எழுத்துமூல உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியாது என்று கூறி சென்றிருக்கின்றார் அமைச்சர்.

நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை அமுல்படுத்தினாலேயே பெரும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிற நிலையில், அதனை செய்வதற்கான எந்த எத்தனத்தையும் செய்யாத ஒருவர், அதுவும் வடக்கு மக்களினால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவர் அமைச்சராக இருந்து என்ன பயன் என்றுதான் கேட்க வேண்டியிருக்கின்றது. டக்ளஸ் தேவானந்தா யார் யாரையோ மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலைகளுக்கு ஒத்துழைக்கக்கூடாது. இப்போது அவர் அதனைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

நன்றி

முகநூல் – புருஜோத்தமன் தங்கமயில்