எவரெஸ்ட் சிகரத்தில் உருகும் பனிப்பாறை – 100 கோடி பேருக்கு ஆபத்து என எச்சரிக்கை

0
281
Article Top Ad

எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள உயரமான பனிப்பாறை பருவநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக உருகி வருவதாக அமெரிக்கா – மையின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறையின் அகலம் 180 அடி வரையில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது.

10 விஞ்ஞானிகள் கொண்ட குழு உலகின் உயரமான வானிலை கண்காணிப்பு நிலையத்தை அந்த பனிமலையில் நிர்மாணித்தனர். மேலும் அங்கிருந்து சில பனிக்கட்டி மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர்.

இந்த ஆய்வு இதுவரை இல்லாத பல படிப்பினைகளைத் தங்களுக்குத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது பனியாக மாற எடுத்துக்கொண்ட நேரத்தை விட 80 மடங்கு வேகமாக உருகி வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றமும் வேகமான காற்றும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

சுமார் 2000 வருடங்களாக உருவான பனிப்பாறைகள் 1990 ஆம் ஆண்டிலிருந்து உருகத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பனிப்பாறையின் அடர்த்தியான பகுதி அழிந்து அடியில் உள்ள பனிப் பகுதி மீது சூரிய ஒளி படர்வதால் பனிப்பாறை வேகமாக உருகி வருகிறது.

இந்த மலைத்தொடர்களை நம்பி சுமார் 100 கோடி மக்கள் உள்ளனர். இவர்கள் குடிதண்ணீருக்கு இந்த மலைத்தொடர்களைதான் சார்ந்துள்ளனர். எனவே இந்த மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கண்டறிந்த தகவலைக் கொண்டு உலகின் பிற பனிப்பாறைகள் குறித்த ஆய்வை விரிவுபடுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.