கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் – அவசர நிலை பிரகடனம்

0
352
Article Top Ad

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் ஒட்டாவாவில் அவசர நிலையை மேயா் பிரகடனம் செய்துள்ளாா்.

கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டக்காரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தலைநகர் ஒட்டாவாவை கடந்த 29 ஆம் திகதி முதல் முற்றுகையிட்டுள்ள அவா்கள் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்திய வாகனப் பேரணி உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்தது.

குறிப்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சோ்ந்த குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். ‘தீவிர இடதுசாரி ஆதரவாளரான கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் நாட்டை அழித்துவிட்டதாக’ டிரம்ப் விமா்சித்தாா்.

தலைநகரில் நடைபெற்று வரும் போராட்டத்தால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனா். அந்தப் போராட்டம் ஒரு முற்றுகை என காவல்துறை தலைவா் அறிவித்த நிலையிலும் போராட்டம் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. மாகாண சட்டப்பேரவை கட்டடத்தை போராட்டக்காரா்கள் அணுக முடியாதபடி காவல்துறையினா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதற்கிடையே, போராட்டக்காரா்கள் சிலரின் மோசமான நடவடிக்கைகளால் கனடா மக்கள் கோபமடைந்துள்ளனா். கடந்த வெள்ளிக்கிழமை தலைநகரில் உள்ள தேசிய போா் நினைவிடத்தை அவமதிக்கும் வகையில் சிலா் நடந்துகொண்டது மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது.

கொரோனா கட்டுப்பாடுகள் இரத்துச் செய்யப்படும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்போவதில்லை எனவும், ஜஸ்டின் ட்ரூடோ அரசைக் கலைக்க வேண்டுமெனவும் போராட்டக்காரா்கள் அறிவித்துள்ளனா்.

இந்நிலையில், தலைநகா் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா் மேயா் ஜிம் வாட்சன். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தலைநகரில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோரின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு வசதியாக இந்த அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி மற்றும் பிற சட்டரீதியிலான உதவிகள் தேவைப்படுவதையும் இந்தப் பிரகடனம் உணா்த்துகிறது’ என்றார்.

இதனிடையே, கனடாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவை சோ்ந்தவா்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும்; கனடாவை சீா்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவைச் சோ்ந்த எந்த அமைப்பும் நிதியுதவி அளிக்கக் கூடாது என கனடாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதா் புரூஸ் ஹெய்மன் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளாா்.