வடகொரிய ஆயுத விவகாரம் – சர்வதேச விசாரணையைக் கோர முடியாது என பஸில் திட்டவட்டம்

0
265
Article Top Ad
வடகொரியாவிடம் நாம் ஆயுதம் வாங்கிய நடவடிக்கை சட்டவிரோதமானது அல்ல. எனது இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர் தரப்புக்கள் சர்வதேச விசாரணையை ஒருபோதும் கோர முடியாது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
‘இறுதிக்கட்டப் போரின்போது கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கியதாக நீங்கள் தெரிவித்த கருத்தை போர்க்குற்ற ஒப்புதல் வாக்குமூலமாகக் கருதி சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்புக்கள் வலியுறுத்துகின்றன. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?’ என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம், சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பஸில் ராஜபக்ச,

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உச்சம் பெற்ற காலப்பகுதியில் கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியது என்ற கருத்தை நான் ஒருபோதும் வாபஸ் பெறப்போவதில்லை. அன்று நடந்த உண்மையைத்தான் இன்று கூறினேன்.

அது சட்டவிரோத நடவடிக்கை அல்ல. அதை எம்மால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நியாயப்படுத்த முடியும். எனினும், இந்தக் கருத்தை ஊடகங்கள் என்னிடம் திரும்பக் திரும்பக் கிளறுவதை நான் விரும்பவில்லை. சர்வதேசப் பிரச்சினையை எழுப்ப நான் விரும்பவில்லை. எனது கருத்தைத் தமிழ்த் தரப்பினர் அல்லது புலம்பெயர் தரப்பினர் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த முடியாது.
ஏனெனில், பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவே அன்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்தோம். நாம் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவில்லை என்று பதில் வழங்கினார்.