நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக நிரந்தர தீர்வை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் விசேட கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், அரச பங்காளிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய ஆகியோர் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கபீர் ஹாஷீம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, இரா.சாணக்கியன் ஆகியோரும் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கூட்டறிக்கையின் பிரகாரம், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாடு எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
01. 2020 ஏப்ரலில் இருந்து சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்தமையே இதன் மையக்கருமாகும்.
02. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மாதாந்தம் தேவையான இறக்குமதிக்குக் கூட போதுமானதாக இல்லாத காரணத்தால், சுதந்திரத்துக்குப் பின்னர் மிகக் குறைந்த அந்நியச் செலாவணியை நாடு கொண்டுள்ளது.
03. 2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அரச வருவாயில் 70 சதவீத கடன் வட்டி செலவினம் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த கடன் வட்டி விகிதமாகும்.
04. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த பொதுக் கடன் 95 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
மேற்கூறியவை மிகப்பெரிய பொருளாதார சவாலைப் பிரதிபலிக்கின்றது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
………