விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக்குத்து’ பாடல் வெளியீடு – இதில் என்ன முக்கிய தகவல்?

0
277
Article Top Ad

காதலர் தினத்தன்று நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் இருந்து ‘அரபிக்குத்து’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’ பட வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் 100வது நாள் படப்பிடிப்பு முடிவடைந்தபோது அந்த படக்குழு சிறப்பு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. இதையடுத்து பொங்கல் அல்லது குடியரசு தினத்திற்கு ‘பீஸ்ட்’ படம் தொடர்பாக ஏதும் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓமிக்ரான் பரவல் சூழல் காரணமாக படத்தின் பாடல் வெளியீடு தள்ளிப்போய் இப்போது காதலர் தினத்தன்று படத்தில் இருந்து முதல் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகிய மூவரும் இந்த பாடலுக்காக கலந்துரையாடல் நடத்தும் படியான கலகலப்பான முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் விஜய்யும் தொலைபேசி மூலமாக இவர்களுடன் பேசியிருந்தார்.

‘அரபிக்குத்து’ பாடலில் என்ன சிறப்பு?

‘ஹலமதி ஹபிபோ’ பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள். ஏற்கெனவே இந்த இணை ‘டாக்டர்’ படத்தில் ‘செல்லம்மா’ பாடலை சேர்ந்து பாடியுள்ளனர். மனோஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். லிரிக்கல் வீடியோ இடையில் பாடலின் சில காட்சிகளும் இந்த காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் கோல்ட் நிறத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருக்கும்படியான இந்த பாடல் ஸ்டுடியோ செட்டுக்குள் நடனம் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது.