மீனவர் பிரச்சனை – தீர்வு தருவது யார்?

0
329
Article Top Ad

சுப்பர்மடம் போராட்டம் மீனவர்களின் விவகாரத்தை மறுபடியும் தலைப்புச்செய்தி ஆக்கியது. வத்திராயானைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழக மீனவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்பரப்பில் நிகழ்ந்துவரும் தீர்வு கிடைக்காத விவகாரங்களில் ஒன்று மீனவர் விவகாரமும் ஆகும். காணிப்பிரச்சினை,காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்,நில மீட்புக்கான போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம் என்பவற்றோடு ஒப்பிடுகையில் மீனவர்களின் போராட்டம் வித்தியாசமானது. ஒரே சமயத்தில் உள்நாட்டு தன்மையும் பிராந்திய தன்மையும் மிக்கது. ஒரு பிராந்தியக் கடலில் எல்லையைத் தாண்டும் மீனவர்களின் விவகாரம் அது.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஈழத்து மீனவர்கள்தான். அடுத்த பாதிப்பு இந்தியாவுக்குத்தான். ஏனென்றால் இது ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கனெக்டிவிட்டியை அறுக்கும் ஒரு விவகாரம்.ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கனெக்டிவிட்டி அறுக்கப்பட்டால் அது ஈழத் தமிழர்களையும் பாதிக்கும்.அதேசமயம் இலங்கைத்தீவின் மீது இந்தியா தலையிட விரும்பும்போது தமிழகத்தின் ஊடாக ஈழத்தமிழர்களைக் கையாள்வது மேலும் கடினமானது ஆகும்.எனவே மீனவர்களின் விவகாரத்தில் முதலாவது பாதிப்பு மீனவர்களுக்கு.அடுத்த பாதிப்பு இந்தியாவுக்கு.

இரண்டு நாடுகளுக்கு இடையிலான இந்தப் பிரச்சினையானது, இரண்டு மீனவ சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினையாக தொடர்ந்தும் பேணப்பட்டு வருவதற்கு இந்தியாவும் பொறுப்பு. இலங்கையும் பொறுப்பு. குறிப்பாக இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் இரண்டு மீனவ சமூகங்களும் மோதுவதை ஆர்வத்தோடு ரசிக்கிறது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான கனெக்டிவிட்டி இதன்மூலம் படிப்படியாக அறுந்து வருகிறது.

ஒருபுறம் கிளப் ஹவுஸ், ருவிற்றர் கீ ஸ்பேஸ் போன்றவற்றில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்தவர்களும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அசிங்கமான ஒரு மோதல் அது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான இணைப்பைச் சிதைக்கும் ஒரு மோதல் அது. அது ஒருபுறம்.

இன்னொரு புறம் மீனவர்களின் விவகாரம். தமது மீனவர்கள் கடலில் வைத்துக் கொல்லப்படும்போது ஈழத்து மீனவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் பதிலுக்கு பழி வாங்க முயற்சிப்பார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி அவர்கள் ஆவேசமாகக் கேட்டதும் அதைத்தான். கடற்படையும் போலீசாரும் அமைச்சரும் தமக்கு எழுத்து மூல உத்தரவாதம் ஒன்றைத் தர வேண்டும் என்று அந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால இலக்கு நிர்ணயித்து அதற்குள் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு எழுத்துமூல உத்தரவாதத்தை கொடுக்க யாராலும் முடியவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் கடலில் அடிபட்டுச் சென்றுவிட்டன .

சுப்பர் மடப் போராட்டத்தில் வழமைபோல அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மீனவர்களோடு நின்று உரை நிகழ்த்தினார்கள், வாக்குறுதிகளை வழங்கினார்கள். வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக உறுதி கூறினார்கள். ஆனால் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. எந்தவோர் அரசியல்வாதியாலும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.

இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு விட்டதாகவும், இதில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இது தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலையில் காணப்படுவதாகவும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகிறார்கள். தமிழக,ஈழ மீனவர்களை மோதவிடும் சூதான உள்நோக்கம் இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இருதரப்பு மீனவர் பிரதிநிதிகளையும் சந்திக்க வைத்து இப்பிரச்சினை தொடர்பில் ஒரு பொது உடன்பாட்டை அடைவதற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு சங்கம் செயற்பட்டதாகவும், அது தொடர்பில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் நடைமுறை என்னவென்றால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் எல்லைதாண்டி வருகிறார்கள் என்பதுதான்.

தீர்வு கிடைக்காத பின்னணியில் தொடர்ச்சியாகத் தொழில் பாதிக்கப்பட்டு வருமொரு பின்னணியில், மீனவர்கள் விரக்தியும் கோபமும் அடைகிறார்கள். தமது வலைகளை தாங்களே தெருவில் போட்டு எரிக்கிறார்கள். தமது படகுகளைத் தாங்களே வீதிகளில் போட்டுக் கொழுத்துகிறார்கள். இது துர்பாக்கியமான ஒரு நிலை. தமது தொழிற் சாதனங்களை தமது கைகளாலேயே எரிப்பது என்பது. இந்த விரக்தியை, கோபத்தை தமிழ் அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்கிறார்களா? செயற்பாட்டாளர்கள் விளங்கிக் கொள்கிறார்களா? இந்தியா விளங்கிக்கொள்கிறதா?

விரக்தியடைந்த மீனவர்கள் படிப்படியாக தொழிலைக் கைவிடும் ஒரு நிலைமை தோன்றிவருகிறது. ஏற்கனவே மீனவ தொழிலுக்குள்ள சாதி அடையாளம் காரணமாக இளைய தலைமுறை மீன்பிடித் தொழிலில் ஆர்வம் காட்டுவது ஒப்பீட்டளவில் குறைந்து வருவது அவதானிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும் கப்பல்களில் கப்பலோட்டிகளாக பெரிய தொகை சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்கள். இவ்வாறு பல்வேறு வழிகளிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் தொகை குறைந்து கொண்டே போகிறது.

தமிழ் மக்கள் மிகநீண்ட கடல் எல்லைகளில் சொந்தக்காரர்.தமிழ் பொருளாதாரத்தின் அடிப்படைகளில் ஒன்று கடற்றொழில்தான் என்று சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனவ சமூகங்கள் தொடர்பான ஒரு புள்ளிவிபர நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பேராசிரியர் சிவநாதன் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு கிடைத்த ஒரு புள்ளி விவரத்தின்படி இலங்கைத் தீவின் மொத்த மீன் உற்பத்தித் துறையில் நாற்பத்தி மூன்று விதமான உற்பத்தி வடபகுதியிலிருந்து சென்றது என்று. அதுவும் குடாநாட்டை மட்டும் கணக்கில் எடுத்து அந்த விகிதம் கணிக்கப்பட்டிருந்தது. மன்னார் போன்ற எனைய மாவட்டங்களையும் இணைத்தால் அந்த விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்று பேராசிரியர் சொன்னார்

1983ஆம் ஆண்டு மயிலிட்டித்துறை முகம் தமிழ் மீனவர்களின் கைகளில் இருந்தது. ஆனால் இப்பொழுது அது உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கிறது. அது இப்பொழுது பெருமளவுக்கு சிங்கள மீனவர்களின் பிடிக்குள் இருக்கிறது. மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து நிற்கும் பெரிய றோலர்களில் பெரும்பாலானவை சிங்கள முதலாளிகளுடையவை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். பல நாட்கள் கடலில் மீன் பிடிக்க கூடிய பெரிய றோளர்களில் கிட்டத்தட்ட 45 சிங்கள முதலாளிகள் உடையவை. ஒன்று மட்டும்தான் தமிழ் முதலாளியுடையது. அவரும்கூட தொழில் தெரிந்த வேலையாட்கள் இல்லாத காரணத்தால் தொழிற் போட்டியில் நிலைத்து நிற்க முடியாமல் கஷ்டப்படுவதாக தெரிகிறது.

ஒருபுறம் சாதி அடையாளம் காரணமாக இளந் தலைமுறைக்கு மீன்பிடித் தொழிலிலில் ஆர்வம் குறைகிறது. இன்னொருபுறம் எல்லை மீறி வரும் மீனவர்களால் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் கடலின் வளமும் விறாண்டப்படுகிறது. மீன்பிடித் துறையை ஒரு இண்டஸ்ட்ரியாக மாற்றினால் அது சாதி கடந்த ஒரு தொழில் துறையாக விருத்தியடையும். ஆனால் இப்போது உள்ள நிலவரங்களின்படி பல்தேசியக் கொம்பனிகளின் முகவர்களாக உள்ள மீன்பிடி முதலாளிகள் ஏழை மீனவர்களை அவர்களுடைய சொந்த கடலிலேயே மீனவக் கூலிகளாக மாற்றி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான ஒரு பின்னணியில் தமிழ் அரசியல் வாதிகளும் செயற்பாட்டாளர்களும் ஒரே வேளையில் இரு வேறு பிரச்சனைகளை குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

முதலாவது உடனடிப் பிரச்சினை. அதில் எல்லை கடந்து வரும் மீனவர்களிடம் இருந்து தமிழ் மீனவர்களையும் தமிழ்க் கடலையும் எப்படிப் பாதுகாப்பது என்பது. இரண்டாவது, மீன்பிடித்துறையை தாயக நோக்கு நிலையிலிருந்தும் சூழல் பாதுகாப்பு நோக்கு நிலையிலிருந்தும் எப்படி இண்டஸ்ட்ரியாக்குவது என்பது.

தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டி எழுப்புவது என்பது தாயகத்தின் அடிப்படை வளங்களையும் பலங்களையும் கட்டி எழுப்புவதுதான். இது விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களே போராடுகிறார்கள். மீனவர்களின் விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர்கள்தான் போராடுகிறார்கள். அப்போராட்டக் களங்களில் அரசியல்வாதிகள் பங்குபற்றி உரையாற்றுகிறார்கள்.

கடந்த 12 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளில் ஒன்றாக மீனவர்களின் பிரச்சினையும் காணப்படுகிறது. இதில் முதலில் தமிழ் கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை அழைத்து மீனவ சங்க பிரதிநிதிகளையும் அழைத்து ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு முடிவுக்கு வரவேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக ஏன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் தமிழகத்தோடும் புதுடில்லியோடும் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இருதரப்பு மீனவ சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய குழுக்களை உருவாக்கி குழுக்களுக்கிடையே தொடர்ச்சியான தொடர்பாடலை உருவாக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் தமிழகத்தோடு இதுவிடயத்தில் உரையாட முடியவில்லை என்பது அல்லது உரையாடுவதற்கு முயற்சிக்கவில்லை என்பது தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விதான்.

நன்றி – ஆதவன் செய்திகள்