இறுதிச் சமர்க்களத்தில் இறுதிவரைப் போராடியே மடிந்தவர் பிரபாகரன்! – பொன்சேகா தெரிவிப்பு

0
183
Article Top Ad

 

“இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.”

– இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில் இறுதிப் போரில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரபாகரனின் சாவை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை. அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர்.

பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர். எனினும், அவர் சிறந்த போர் வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.

பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின. அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும், பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே சாவடைந்தார்” – என்றார்.
……..