கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்கு 100 பேருக்கு அனுமதி

0
258
Article Top Ad

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்கு இலங்கையைச் சேர்ந்த 50 பேருக்கும் இந்தியாவைச் சேர்ந்த 50 பேருக்கும் என மொத்தம் 100 பேர் மாத்திரம் பங்கேற்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வருடந்தோறும் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறும் கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் உட்பட பொது மக்களும் கலந்துகொள்வர்.

கச்சதீவு இலங்கை வசம் இருப்பதால் அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதி பெறுவது அவசியமானது.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கச்சதீவுக்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது என்று முதலில் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து தமிழக மீனவர்களை கச்சதீவுக்குள் அனுமதிக்கக்கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இந்திய நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

அதன் பின்னர் அவர் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தமிழக முதல்வரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்பதாக டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 50 பேரும் இந்தியாவைச் சேர்ந்த 50 பேரும் பங்கேற்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.