இது ஆரம்பம் மாத்திரமே; ஜனாதிபதியின் வீட்டை முடக்குவோம் – சாணக்கியன் மீண்டும் எச்சரிக்கை

0
252
Article Top Ad

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை என்றால் வடக்கு – கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று வியாழக்கிழமை காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் பங்கேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ‘நேற்றைய தினம் நான் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லிருந்தேன். அதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி செயலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் வீட்டினையோ முற்றுகையிடுவோம் என தெரிவித்திருந்தேன்.

இன்றைய தினம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியுள்ளோம். இது ஆரம்பம் மாத்திரமே. எமது கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் ஜனாதிபதியின் வீட்டினை முடக்குவோம் என்பதனைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அதேபோன்று இங்கு நாம் போராட்டத்தினை முன்னெடுக்கும் போது ஊடகவியலாளர்கள் இல்லாத சிலர் வந்து எங்களை புகைப்படம் எடுக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள எங்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றால் வடக்கு – கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.’ எனத் தெரிவித்துள்ளார்.