ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேரில் சந்தித்துப் பேசினார்.
இருவருக்கும் இடையிலான இந்த முக்கியத்துவமிக்க சந்திப்பு ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஏற்பட்டுள்ள திசைமாறிய பொறிமுறை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது பேராயர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்குத் தெளிவுபடுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசின் நீதி விசாரணை மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது எனத் தெரிவித்திருந்த கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நீதி கோரி சா்வதேசத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்காக வத்திக்கான் அனுமதியை நாடிய அவா், வத்திக்கான் சென்று பாப்பரசர் பிரான்சிஸைச் சந்தித்துப் பேசிய பின்னர் ஜெனிவா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடனான பேராயரின் சந்திப்பு கோட்டாபய அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
……..