உக்ரைனில் முக்கிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கும் வைரஸை கட்டுப்படுத்தும் அவசர முயற்சிகள் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரம் பெரிய அளவில் பாதிப்படையக்கூடும் எனப் பொதுச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யப் படையெடுப்பால் அங்கு சிகிச்சைக்குத் தேவைப்படும் உயிர்வாயுக் கலன்கள் குறைவாக உள்ளன. உக்ரைனின் பல பகுதிகளில் கொவிட்–19 தடுப்பூசி போடும் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து சுமார் 20 குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் பரவியுள்ளது. அதற்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுமார் 100,000 பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் வாழும் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளனவர்களுக்கான மருந்து இன்னும் ஒரே மாதத்தில் தீர்ந்துவிடும் என்று ஐ.நாவின் எய்ட்ஸ் பிரிவு தெரிவித்தது.
அந்த மருந்தை உட்கொள்ளாவிட்டால் பாதிக்கப்பட்டோரின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்று நம்பப்படுகிறது.