தமது உயிர்களைத் தியாகம் செய்த இளையோர்களின் இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது தமிழரசின் மகளிர் தின நிகழ்வில் மாவை திடசங்கற்பம்

0
152
Article Top Ad

 

“எந்த இலட்சியத்துக்காக எமது இளையோர்கள் கடந்தகாலத்தில் தம் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சி – பசுமைப் பூங்காவில், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற, 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிற்பாடு தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்த 90ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்காக நாம் ஆட்சியாளர்களிடத்திலே பேசினோம்.

அந்த 90 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்காக நான் பிரார்த்திக்கின்றேன்.

குறிப்பாக அப்போதிருந்த பிரதமர் மற்றும் ஜனாதிபதி, நீதி அமைச்சர் ஆகியோரிடத்திலே பேசினோம்.

அதனடிப்படையில் வரவு – செலவுத் திட்டத்திலே பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்காக நிதிகளும் ஒதுக்கப்பட்டன.

அத்தோடு போராலே பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

அவை திருப்தி அடையக்கூடிய விதத்தில் அமைந்தது என்று நான் செல்லவில்லை.

அதேபோல் அனைவருக்கும் அந்தக் கொடுப்பனவுகளும், வேலைவாய்ப்புக்களும் சரியாகப் போய்ச் சேர்ந்தன என்றும் நான் சொல்லவில்லை.

போரில் இழந்த பெண்கள் அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது இளையோர்கள் எந்த இலட்சியத்துக்காகக் கடந்த காலத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியட்சியத்தை எட்டும்வரை எமது பயணம் ஓயாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பெண்கள் விடுதலை மாத்திரம் அல்ல நம் இனத்தின் விடுதலைக்காகவும், நம் தேசத்தின் விடுதலைக்காகவும் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியினர் போராடுவார்கள். அதற்கு எனது வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.
…….