ஏமன் மக்கள் அனுபவிக்கும் வேதனை கற்பனை செய்ய முடியாதது – ஏஞ்சலினா ஜூலி

0
348
Article Top Ad

ஏமன் மக்கள் படும் வேதனை என்பது கற்பனை செய்ய முடியாதது என்று பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் மனிதாபிமான தூதருமான ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் மனிதாபிமானம் மற்றும் அகதிகளுக்கான சிறப்புத் தூதர் ஏஞ்சலினா, மூன்று நாட்களாக ஏமன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் தனது ஏமன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஏமன் மக்கள் படும் வேதனை என்பது கற்பனை செய்ய முடியாதது. இந்த மோதலுக்கு உடனடி மற்றும் அமைதியான தீர்வு தேவைப்படுகிறது.

இலட்சக்கணக்கான மக்கள் ஏமனிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் எல்லாம் நாடு திரும்ப நாம் உடனடியாக வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இலட்சக்கணக்கான மக்கள் அடிப்படை உதவிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.ஏமனில் மிருகத்தனமான மோதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் அப்பாவி உயிர்கள் இழக்கப்படுகின்றன. துன்பச் செய்திகள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தும் உலகில் நாம் வாழ்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மக்களுக்காக இறைவனை வேண்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏமனில் என்ன நடக்கிறது?

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள் ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏமன் போரில் இதுவரை 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.