“சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ அதிகாரிகளை நியமனம் செய்து தமது அமைச்சுக்களை நடத்தியதன் விளைவால் இந்த நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இன்று நடைபெற்ற மக்களின் கையெழுத்துப் பெறும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று இலங்கை அரசு பல்வேறுபட்ட நெருக்கடிகளை நாட்டில் வாழ்கின்ற மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. மிக முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது.
மக்கள் அன்றாட சீவியங்களை நடத்த முடியாதவர்களாக மாறியிருக்கின்றார்கள். எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது.
அன்றாட உணவுப்பொருட்கள் மக்களின் வாழ்வில் பெருத்த அடியை அடித்திருக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு வாழ முடியுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைச் சீராகக் கொண்டு செல்வதற்குச் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி ஒரு நிலைப்பாட்டுக்கு வாருங்கள் எனக் கட்சித் தலைவர்கள், நிபுணர்கள் எனப் பலரும் கோரியிருந்தனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் வாசல்களைத் தொடமாட்டோம், அவர்களுடன் பேசமாட்டோம் என்று தெரிவித்த அரச தரப்பினர் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றார்கள்” – என்றார்.